Moi Virunthu in Peravurani

1 comments


அரிசி சோறு... ஆட்டுக்கறி குழம்பு... அமர்க்களப்படும் ஆடி மொய் விருந்து!!

ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.


ஆடிமாதம் கோவில்களில் தெய்வங்களுக்கு விஷேசங்கள் நடத்தப்படுவதால் திருமணம் உள்ளிட்ட எந்த விஷேசங்களும் நடத்தப்படுவதில்லை. ஆனால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மொய்விருந்து விழா களை கட்டத்தொடங்கிவிடும்.


1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருகிறது.


களைகட்டும் பேனர்கள்


ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி ஆடி வரைக்கும் தினம் ஒரு தெருவில்


மொய்விருந்து நடைபெறும். இதற்காக சிறப்பு அழைப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை விருந்துக்கு அழைக்கின்றனர் மொய்விருந்து வைப்பவர்கள். வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். விருந்து நடைபெறும் தேதியை குறிப்பிட்டு வரவேற்பு பேனர்களும் ஆங்காங்கே வைத்திருப்பார்கள்


அரிசி சோறும் ஆட்டுக்கறி குழம்பும்


காதுகுத்து, திருமணம், பூப்புனித நீராட்டுவிழா போன்ற விழாக்களைப் போல இந்த விருந்து மண்டபத்தில் மட்டும் நடத்தப்படுவதில்லை. தெருவை அடைத்து பந்தல் போட்டு விருந்து நடத்தப்படுகிறது. இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு. பந்தலில் மணல் பரப்பிய தரையில்தான் கறிவிருந்து பறிமாறப்படும். உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி விரித்துக்கொள்ளவேண்டும்.


விருந்தின் போது நெல்லுச்சோறும் ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு.


மொய் வசூல்


மொய் வசூல் செய்வதற்காக ஐந்தாறு கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை அண்டாவில் போட்டு பின்னர் கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மொய்விருந்தில் ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் வரை வசூலானதாம்.


மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும். மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.


பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீட்டுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.


மொய்ப்பணத்தில் முதலீடு


மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.


ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.












1 comment:

  1. Pongappa poyi pulla kuttigala padikka vainga......

    ReplyDelete