ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
ஆலய அமைவிடம்
ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்(ஆங்கிலம்:Sri Perungaraiyadi Meenda Ayyanar Temple), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் குளமங்கலம் ஆகும்.
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது. இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரைச் சிலை என வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது.
தல வரலாறு
வில்லுனி ஆறு
குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும். 1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது. 1940 கால கட்டத்தில் குதிரை சிலை சேதம் அடைந்துள்ளதையடுத்து மறுசீரமைப்பு செய்ய முயன்ற போது அதன் வயிற்றுப் பகுதியை உடைக்க முடியாததால் அதன் மேலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டது.வானவெளியில் தாவிச்செல்லும் ஒரு குதிரையின் அங்க அசைவுகளுடன் காணப்படும் இந்த குதிரைசிலைதான் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை என்கின்றனர்.
யானை சிலையும், குதிரை சிலையும்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் யானை சிலையும், எதிரில் அதே உயரத்தில் ஒரு குதிரை சிலையும் இருந்து பிற்காலத்தில் வில்லுனி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அதில் யானை சிலையை அடித்து சென்று விட்டது என்றும் இந்த குதிரை சிலை மட்டும் எஞ்சியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
முத்தரையர் சமூகம்
மேலும் இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.இப்பகுதியில் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது.தமிழர்களின் கட்டிடக்கலை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியிலும் இருந்துவந்தமைக்கு இக்கோவில் சான்றாக விளங்குகிறது.இப்பகுதி மக்களான முத்தரையர் சமூக மக்களால் முன்மொழியப்படும் பழமைவாய்ந்த ஒரே ஆலயமாக இந்த அய்யனார் ஆலயம் விளங்குகிறது.
அண்மைக்கால நிகழ்வுகள்
இக்கோயிலை சுமார் ரூ. 2 கோடியில் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கிராமப் பொதுமக்கள் முடிவெடுத்ததைத் தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கின.கோயில் கருவறை, மஹா மண்டபம் ஆகியவை சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் தனிக்கோபுரத்துடன் விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது
மேலும் ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது.ஆலயத்தின் கருவறை கோபுரத்தில் தங்கக் கலசம் அமைக்க பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று கலசம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் குடமுழுக்கு விழாவானது 23-05-2010௦ ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழா
குடமுழுக்கை காண பல்வேறு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் மாசிமகம் அன்று திருவிழா நாளில் லட்சம் பக்தர்கள் கூடும் இந்த கோயிலில் குதிரைக்கு மட்டும் சுமார் 1000 காகிதப்பூ மாலை போடப்படும். இந்நாளில் அருகிலுள்ள பல ஊர்களி்லிருந்து அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இப்பகுதியைச்சுற்றி சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று சேரும் ஒரே இடம் இந்த ஆலயம் ஆகும்.
Post a Comment