குதிரை சிலைக்கு காகித பூமாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆலங்குடி அருகே பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கோயில் குதிரை சிலைக்கு காகித பூமாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த குளமங்கலம் வில்லுணி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மாசி மக திருவிழா இரண்டு நாள் நடக்கும். இந்த ஆண்டு மாசிமக திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் காகித பூமாலைகளுடன் வந்து கோயிலில் உள்ள 30அடி உயரமுள்ள குதிரை சிலைக்கு அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். இந்த வருடம் 900 காகித பூமாலைகள் குவிந்தன.
மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி, செடல் காவடி போன்றவை எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கீரமங்கலம் ஜேசீஐ அமைப்பினர் மருத்துவ வசதிகளை செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய போக்குவரத்து பணிமனைகளில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. கீரமங்கலம் எஸ்ஐக்கள் வீராச்சாமி, தமிழரசன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Post a Comment